மகளிர் தின விழாவை முன்னிட்டு எங்கள் ஊர் எங்கள் மேயர் நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மாணவியரிடம் கலந்துரையாடினார்.

மகளிர் தின விழாவை முன்னிட்டு  எங்கள் ஊர் எங்கள் மேயர் நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மாணவியரிடம் கலந்துரையாடினார்.

கலைஞர், ஸ்டாலின், எனது தந்தை பெரியசாமி ஆகியோர் தான் எனக்கு ரோல் மாடல் என்று தூத்துக்குடியில் நடந்த மகளிர் தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். 

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இதில், வின்மீன் தமிழ் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற 'எங்கள் ஊர் மேயர்' கல்லூரி மாணவிகள் கேள்வி-பதில்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பதிலளித்து பேசுகையில்: "எனக்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞர், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், எனது தந்தை பெரியசாமி ஆகியோர் தான் எனக்கு ரோல் மாடல். அவர்களது வழியிலேயே இன்று நான் பணியாற்றுகிறேன். இன்று நான் மேயராக இருந்து பணியாற்றுவதை பார்ப்பதற்கு எனது தந்தை பெரியசாமி இல்லையே என்ற மனவருத்தம் உள்ளது. 

பொதுமக்கள் என்மீது நம்பிக்கை வைத்து நேரில் சந்திக்கும் பொழுது பலர் கூறும் கருத்துக்களை நான் குறிப்பாக எடுத்துக் கொள்வேன். அதில் மக்களுக்கு முக்கியமான திட்டம் எது என்பதை நல்ல சிந்தனை, தொலைநோக்குத் திட்டத்தோடு ஆய்வு செய்து அதை நடைமுறைப்படுத்துவேன். ஒவ்வொருவரும் முயற்சி மற்றும் பயிற்சியில் ஈடுபட்டால் சாதனை படைக்கலாம். மாநகரில் சுகாதாரத்தை பேணிப் பாதுகாக்கும் வகையில் 1000 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

எதிர்கால மக்கள் நலன் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையோடு, மரக்கன்றுகள் நடப்பட்டு மாசு இல்லாத நிலை உருவாக்கியும், மாநகராட்சிப் பள்ளியில் தரம் உயர்வு, உள்ளிட்ட பணிகளுக்காக நாங்கள் பொறுப்பேற்றப் பின் தேசிய அளவில் 3 விருதுகளை பெற்றுள்ளோம். 80 சதவீதம் நெகிலி கழிவுகளை உபயோகப் படுத்தாத படி விழிப்புணர்வை ஏற்படுத்தி வழிவகை செய்துள்ளோம். உங்களைப் போன்ற மாணவிகளும் இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுவதற்கு நீங்களும் ஒத்துழைக்க வேண்டும். மாநகரில் புதிதாக 2500 மல்டிகலர் விளக்குகள் அமைக்கப்பட இருக்கின்றன. 

அதில் காலசூழ்நிலை பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றாற்போல் மின்விளக்குகள் ஒளிரும். மாநகராட்சிப் பணிகளை பொறுத்தவரை மாநகராட்சி பகுதிகளில் தரமான நல்லமுறையில் பணி செய்பவர்களுக்கும், குறைந்தளவில் ஒப்பந்தம் கேட்டவர்களுக்கும் வழங்கப்பட்டு, அதை முறையாக ஆய்வு மேற்கொள்கிறோம். அதில் ஏதாவது தவறு நடந்திருந்தால் நடவடிக்கை மேற்கொள்வோம். 

அதேபோல் முதலமைச்சராக தளபதியார் பொறுப்பேற்றவுடன் தூத்துக்குடி பகுதியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்டு, எங்களுக்கு கொடுத்த ஆலோசனையின்படி புதிய கால்வாய் மற்றும் தார்சாலைகள் அமைத்துள்ளோம். தற்போது பெய்த மழை வெள்ளம் எதிர்பாராதது. இருப்பினும், அதையும் எதிர்கொண்டு பணிகளை செய்து மக்களை பாதுகாத்துள்ளோம். இனி வரும் மழை காலங்களில் எந்த கனமழையாக இருந்தாலும், சாலையில் தண்ணீர் தேங்காத வகையில் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளோம். மாநகராட்சி பகுதிகளில் 155 பூங்காக்கள் இருக்கின்றன. 

அதில், கட்டமைப்புப் பணிகளை முறைப்படுத்தி செய்துள்ளதால், முதியவர்கள் பலரும் காலை, மாலை நேரங்களில் அதில் தங்களது உடல் வலிமைக்கேற்ப நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர். நாங்கள் ஆய்வுக்குச் செல்லும் போது அவர்களெல்லாம் எனது தந்தையோடு பழகியவர்களாகத் தான் பல பேர் இருக்கின்றனர். நீங்கள் ஏற்படுத்திக் கொடுத்த பூங்காவின் மூலம் நாங்கள் புத்துணர்ச்சியோடு இருக்கிறோம் என்று பொதுமக்கள் கூறும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. 

ஓய்வின்றி உழைத்தால், எல்லோரும் தான் நிர்ணயித்து கடக்க வேண்டிய லட்சியத்தை அடையலாம். அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், என்று மாணவிகள் மத்தியில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். விழாவிற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் பேராசியர் கருப்பசாமி மற்றும் பாலவிநாயகம், அருணாச்சல ராஜ், ஜெயலெட்சுமி உள்ளிட்டோர் செய்திருந்தனர். கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.