தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்க கூட்ட அரங்கில் "Heart Health for Businessman"விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்க கூட்ட அரங்கில் வைத்து “Heart Health for Businessman" என்ற தலைப்பில் விழிப்புணர்வுக் கூட்டம் சங்கத் தலைவர் தமிழரசு தலைமையிலும் நிர்வாகச் செயலாளர் பிரேம் பால் நாயகம் முன்னிலையிலும் 12/04/23 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டாக்டர் அருள்ராஜ் பேசுகையில், மனித வாழ்விற்கு முதன்மையாக இருப்பது இதய நலம். ஆனால், அது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம்;, நுரையீரல் நோய், புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களினால் தன்னுடைய நலத்தை இழந்து பாதிப்புக்குள்ளாகிறது என்று கூறினார். மேலும், இந் நோய்களுக்கு அடிப்படையான காரணங்கள் தவறான உணவு பழக்க வழக்கங்கள், உடல் அசையாமை, குடிப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்றவையாகும். மேலும் மாரடைப்பு, வால்வு வியாதிகள், இதய சதை வியாதிகள், பெரிகார்டியல் வியாதிகள், இதயத்துடிபர் சரியின்மை போன்றவைகள் இதயத்தில் காணப்படும் முக்கிய வியாதிகளாகும்.
மாரடைப்பு நோயானது பொதுவாக குளிர்ப்பிரதேசங்களில் மட்டுமே காணப்படும் ஒரு நோயாகும். ஆனால், இப்பொழுது இக்குறைபாடு இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. மேலும் இருதய இரத்தக்குழாய் சேதாரம் அடையாமல் இருப்பதற்கான காரணங்களையும் கூறினார். அவை முறையே மாற்றவே முடியாதது மற்றும் மாற்றக் கூடியது என்று வகைப்படுத்தினார்.
பிறப்பு மற்றும் பாரம்பரியம் இவையிரண்டும் மாற்ற முடியாததாகும். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுபபு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் குடிப்பழக்கம் போன்றவைகள் மாற்றக் கூடியதாகும் எனவும் கூறினார். மேலும், நெஞ்சுவலி மாரடைப்பிற்கான முதன்மையான முதல் அறிகுறியாகும். மூச்சுத் திணறல், தலைசுற்றல், படப்படப்பு, வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்த்தல், நினைவுத் தடுமாற்றம், நீலம் பூத்தல் போன்றவைகள் மாரடைப்பிற்கான அறிகுறிகளாகும்.
மாரடைப்பு நோயை உணவுப் பழக்க வழக்கங்கள் மூலமாக கட்டுப்படுத்தலாம். மீன், காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் போன்ற உணவே மருந்தாகவும், அசைவம், இனிப்பு, பொரித்த உணவு, கொழுப்புக் கலந்த உணவு போன்றவைகள் விஷ உணவு என்றும் வகைப்படுத்தினார்.
வாழ்வதற்காகவே சாப்பிடுதல், உடற்பயிற்சி அதாவது குறைந்தது 30 நிமிடம் முதல் 60 நிமிடம் வரை நடைபயிற்சி, நீச்சல், சைக்கிள் பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளால் இதய நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். மேலும் அளவான உணவு, குறைவான உப்பு உட்கொள்ளுதல், தேவையான அளவு சர்க்கரையினை சேர்த்தல், கொழுப்பு வகை உணவுகளை தவிர்த்தல் போன்றவைகளால் உடல்பருமனைக் குறைத்தும் இதய நோயிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். தியானம், மூச்சப்பயிற்சி, யோகா, ஓய்வு, தூக்கம், சிரிப்பு, ,நடனம், போன்றவைகளால் மன அழுத்தத்திலிருந்து விடுதலை அடையமுடியும் என்றும் அவர் கூறினார். இறுதியாக நோய்க்கான மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின் படி தொடர்ந்து எடுத்தல், புகைப்பிடிக்காதிருத்தல், மது அருந்தாமை மற்றும் குறைவாக சாப்பிடுதல் போன்ற பழக்க வழக்கங்கள் வழியாக நலமான இதயம், நம் கையில் உள்ளது என்பதை நன்கு உணரமுடியும் என்றும் கூறி தனது சிறப்புரையினை நிறைவு செய்தார்.
பின்னர், கூட்டத்திற்கு வருகை புரிந்த உறுப்பினர்களில் சிலர் எழுப்பிய இதய நோய் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு மிகவும் தெளிவாகப் பதிலளித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் சங்க நிர்வாகச் செயலாளர் பிரேம்பால்நாயகம் நன்றி உரையாற்றினார்.