தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி, பொன்விழாவை முன்னிட்டு பள்ளி மாணவியருக்கான "மகாமஹோத்சவ்" நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் பொன்விழாவை முன்னிட்டு 28.11.2024 அன்று பள்ளி மாணவிகளுக்கான "மகாமஹோத்சவ்" நிகழ்ச்சி குத்துவிளக்கேற்றி இறைவணக்கத்துடன் தொடங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இயற்பியல்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ந.ரத்னா வரவேற்புரை வழங்கினார். கல்லூரித்தலைவர் திரு. ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம் தலைமையுரையாற்றினார். கல்லூரி செயலர் சொ.சுப்புலட்சுமி, கல்லூரி முதல்வர் முனைவர் க.சுப்புலட்சுமி ஆகியோர், வாழ்த்துரை வழங்கினர். கணினித்துறை உதவிப்பேராசிரியர் ஜெ.ஆரோக்கிய ஜெயந்தி நோக்க உரையாற்றினார்.
தூத்துக்குடி வட்டாரத்தைச் சார்ந்த 12 பள்ளிகளில் இருந்து 20 ஆசிரியர்கள் 157 மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவிகளுக்குச் சொல்விளையாட்டு, குறுக்கெழுத்துப்போட்டி, அடையாளச்சுற்று, அறிவியல் இணைப்புப்போட்டி, அதிவிரைவுச்சுற்று, நினைவுத்திறன்சுற்று, எனப் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. அதிகப்புள்ளிகளைப் பெற்ற முதல் இரண்டு பள்ளிகளுக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளும் பங்கு பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து மாணவிகள் கலை மற்றும் அறிவியல் கண்காட்சியையும் கல்லூரி ஆய்வகத்தையும் பார்வையிட்டனர். இந்நிகழ்வு பள்ளி மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்தும் விதமாக இருந்தது.
நிறைவு விழாவில் பொன்விழா நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளர் கணிதத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் து.ராதா நிறைவுரையாற்றினார். வேதியியல்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ச.ஸ்டெல்லாபாக்கியம் நன்றி நவில, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவடைந்தது.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை "மகாமஹோத்சவ்" ஒருங்கிணைப்பாளர் கணினித்துறை உதவிப்பேராசிரியர் ஜெ.ஆரோக்கியஜெயந்தி ஒருங்கிணைப்புக்குழு பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் இணைந்து சிறப்பாகச் செய்திருந்தனர்.