ஓட்டப்பிடாரத்தில் தனியார் காற்றாலை நிறுவனத்தின் அட்டூழியத்தின் தொடர்ச்சி - முன்னாள் எம்எல்ஏ மீது தாக்குதல்!

ஓட்டப்பிடாரத்தில் தனியார் காற்றாலை நிறுவனத்தின் அட்டூழியத்தின் தொடர்ச்சி - முன்னாள் எம்எல்ஏ மீது தாக்குதல்!

ஓட்டப்பிடாரம் பகுதியில் தனியார் காற்றாலை நிறுவனத்தின் அட்டூழியத்தின் தொடர்ச்சியாக தற்போது முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜ் கொடூரமாக தாக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவது மின்சார உற்பத்திக்காக தனியார் காற்றாலை நிறுவனங்கள் காற்றாடி அமைக்கும் பணியை மேற்கொண்டு வருக்கின்றன. அவ்வாறு காற்றாடிகளை அமைக்கும் போது தனியார் இடங்களில் உரிமையாளர்களின் அனுமதியின்றி பயன்படுத்துவது, கிராம பொது சாலை மற்றும் பாதைகளை சேதப்படுத்துவது, பொது நீர் வழித்தடங்களை அழிப்பது, விவசாய நிலங்களை நாசப்படுத்துவது என தொடர் அட்டூழியத்தில் ஈடுபட்ட வண்ணம் இருந்து வருகின்றனர்.

காற்றாடி நிறுவனங்களில் இத்தகைய அக்கிரமங்கள், அநீதிகளுக்கு எதிராக யாராவது சமூக ஆர்வலர்களோ, ஒட்டுமொத்த கிராம பொதுமக்களோ குரல் கொடுத்தால், அவர்கள் மீது பொய் புகார் கொடுத்து காவல்துறை மூலம் அடக்குமுறையை கையாள்வது, குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்துவது என தனியார் காற்றாலை நிறுவனம் ஆளும் கட்சியின் துணையோடு எல்லையே இல்லாமல் அராஜக போக்கோடு செயல்பட்டு வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு கூட ஓட்டப்பிடாரம் தொகுதியில் 50க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் தனியார் காற்றாலை நிறுவனத்தின் அடாவடி செயலுக்கு எதிராக போர்கொடி தூக்கி போராடி பார்த்தார்கள். ஆனால் அதற்கு எந்தவொரு பலனும் இன்றி முடிவு ஏற்படாத நிலை தொடரவே, ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜ் ( செப்.,2 ) நேற்று, செம்கார்ப் என்ற தனியார் காற்றாலை நிறுவனத்தின் அடாவடி செயலை தட்டி கேட்டுள்ளார்.

ஆனால், அந்த தனியார் காற்றாலை நிறுவனத்தினர் மற்றும் அன்னை கான்கீரிட் நிறுவன ஊழியர் ஆகியோர் சேர்ந்து, முன்னாள் எம்எல்ஏ என்று கூட பார்க்காமல் அவரை கை மற்றும் இரும்பு கம்பிகளால் கொடூரமாக தாக்கியதாகவும், தாக்குதலில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஓட்டப்பிடாரம் வஉசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக இன்று ( செப்.,3 ) தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் எம்எல்ஏ கூறுகிறார்.

தனியார் காற்றாலை நிறுவனத்தின் அராஜகத்தை தட்டிக்கேட்ட முன்னாள் எம்எல்ஏவிற்கே இந்த நிலை என்றால், பாமர மக்களுக்கு என்ன நிலை ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தனியார் காற்றாலை நிறுவனத்தினரின் இத்தகைய செயலுக்கு ஆட்சியாளர்களோ, மாவட்ட நிர்வாகமோ ஓர் கடிவாளம் போடாவிட்டால், தூத்துக்குடியில் விரைவில் ஓர் மிகப்பெரிய அளவில் மக்கள் புரட்சி ஏற்படும் சூழல் அமையலாம் என்று சொல்லப்படுகிறது.

விழித்துக்கொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?