தமிழகத்தில் திமுக அரசு செயல்படுத்தி வரும் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அதிரடி மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் இன்று காலையிலேயே ரூ.5,000 வரவு வைக்கப்பட்டதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. தேர்தலை முன்னிட்டு தொகை உயர்த்தப்படும் என்ற தகவல்கள் வெளியான நிலையில், பிப்ரவரி 13 ஆம் தேதி காலை பெண்களுக்கு ‘சர்ப்ரைஸ்’ ஆக ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ.2,000 சேர்த்து மொத்தம் ரூ.5,000 நேரடியாக வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சுமார் 1.31 கோடி குடும்பத் தலைவிகள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், மே மாதத்திலிருந்து திமுக ஆட்சி மீண்டும் அமைந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கொண்டாடும் வகையில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலையத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் பெண்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
அமைச்சர் பேட்டி;
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது:
“மத்திய பாஜகவும், அடிமை அதிமுகவும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கக்கூடாது என்று சதி வேலை செய்தனர். ஆனால் அந்த சூழ்ச்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளன. பெண்களின் பொருளாதார முன்னேற்றம் தான் தமிழக அரசின் முதன்மை நோக்கம்,” என்றார்.
மகளிர் உரிமைத் தொகை பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் இருக்க வேண்டும், நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கக் கூடாது உள்ளிட்ட பல தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த பெண்களுக்கே தொகை வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம் ஏழை, எளிய பெண்கள் தங்களது அன்றாட செலவுகளை சமாளிக்க உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது